அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஜெட் இன்ஜின்களை இந்தியா வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
தொடக்கம் முதலே ராணுவத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தத் தீவிரம் மேலும் அதிகரித்துள்ளது.
அப்பாச்சி ஹெலிகாப்டர்கள், சுதர்சன் சக்ரா வான் பாதுகாப்பு அமைப்பு, அதிநவீன ரேடார்கள் எனப் பல்வேறு தளவாடங்களை ராணுவத்தில் இணைத்து நாட்டின் பாதுகாப்பை மத்திய அரசு பலப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஜெனரல் எலக்ட்ரிக் எனப்படும் அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து சக்தி வாய்ந்த ஜெட் இன்ஜின்களை இந்திய அரசு வாங்கவுள்ளது. தேஜஸ் மார்க் 1ஏ ரகப் போர் விமானங்களில் இந்த இன்ஜின்கள் பொருத்தப்படும் எனக் கூறப்படுகிறது.
HAL எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் மூலம் தேஜஸ் மார்க் 1ஏ ரகப் போர் விமானங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வருகின்றன. விமானப்படையில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மிக்-21 ரக விமானங்களுக்கு மாற்றாக இந்தப் புதிய ரக விமானங்கள் உருவாக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்தப் போர் விமானங்களில் 113 GE-404 என்ற சக்தி வாய்ந்த இன்ஜின்களைப் பொருத்த முடிவெடுத்துள்ள இந்திய அரசு, அதனை வாங்க அமெரிக்க நிறுவனத்துடன் ஒரு பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் மாதத்திற்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும், ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் மாதம்தோறும் தலா 2 இன்ஜின்களை இந்தியாவிடம் வழங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஏற்கனவே, LCA Mark 1A ரகப் போர் விமானங்கள் மற்றும் GE-404 இன்ஜின்களை வாங்க ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளது. தற்போது கூடுதலாக 113 ஜெட் இன்ஜின்களை வாங்க மேலும் ஒரு ஒப்பந்தம் போடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.