தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் ரயில்நிலையமான கன்னியாகுமரி குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் ரயில்நிலையத்தைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளத்தை இணைக்கும் இந்த ரயில் நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. தமிழகத்தின் எல்லைப் பகுதியின் இந்த ரயில் நிலையத்தை இருமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் அங்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற புகார் எழுந்துள்ளது.
ரயில் நிலையத்திற்குச் செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சியளிப்பதோடு, பயணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்கு உரிய வாகன நிறுத்துமிடங்களும் இல்லை என்பதால் ரயில் நிலையம் செல்வோர் அனைவரும் பொது போக்குவரத்தையே பயன்படுத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ரயில்நிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் கழிவுநீர்க் கால்வாய் பெருகெடுத்து ஓடுவதால் பயணிகளுக்குச் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையின் படி கன்னியாகுமரி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இதுவரை மூன்று முறை ஆய்வு செய்து சென்ற நிலையிலும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவலநிலையிலேயே காட்சியளிக்கிறது. இந்த ரயில்வே பகுதிகள் திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே கட்டுப்பாட்டில் இருப்பதாலே, அதனைச் சீரமைப்பதில் அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ரயில்நிலையமாக மட்டுமல்லாமல், தமிழகத்தையும், கேரளத்தையும் இணைக்கும் மையமாக இருக்கும் இந்தக் குழித்துறை மேற்கு ரயில்நிலையத்தைச் சீரமைத்து முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.