அமெரிக்காவில் செயல்பட்டு வரும் கத்தோலிக்கப் பள்ளியில் திருநங்கை ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மின்னசோட்டா மாகாணத்தில் கத்தோலிக்கப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு நடந்த திருப்பலியில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர் பிரார்த்தனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது கண்ணாடி ஜன்னல் வழியாக மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர், 23 வயதான திருநங்கை என்றும், அவர் பெயர் ராபின் வெஸ்ட்மேன் என்றும் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்ட நபர் தற்போது உயிருடன் இல்லை.
சம்பவ இடத்தில் அவரும் சடலமாகக் கிடந்துள்ளார். இவர் அதே பள்ளியில் படித்தவர் என்றும், இவரது தாயார் அதே பள்ளியின் செயலாளராகக் கடந்த 2021-ம் ஆண்டு வரைப் பணியாற்றியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
ராபின் வெஸ்ட்மேன் பயன்படுத்திய துப்பாக்கிகளில் டொனால்ட் டிரம்ப்பைக் கொல்ல வேண்டும், இஸ்ரேல் வீழ வேண்டும் போன்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தது.
ஆனாலும் பள்ளியில் அவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கான காரணம் எதுவும் முழுமையாகத் தெரியவில்லை.
பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன், ராபின் வெஸ்ட்மேன் யூடியூப்பில் இருபது நிமிட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.