அமெரிக்காவின் மினியாபோலிஸ் கத்தோலிக்கத் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய ராபின் வெஸ்ட்மேன் பயன்படுத்திய துப்பாக்கிகளில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. யார் இந்த ராபின் வெஸ்ட்மேன் ? துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த புதன் கிழமை, அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரத்தில், ஒரு கத்தோலிக்கத் தேவாலயத்தின் ஜன்னல்கள் வழியாக ஒரு நபர் துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில், 10 வயதுக்கு உட்பட்ட இரண்டு பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டனர் மேலும் 17 பேர் படுகாயம் காயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய 23 வயதான ராபின் வெஸ்ட்மேன், சம்பவ இடத்திலேயே தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைச் செய்து கொண்டார். கொலையாளி 2020- சட்டப்பூர்வமாக, ராபர்ட் வெஸ்ட்மேன் என்ற தனது பெயரை ராபின் வெஸ்ட்மேன் என மாற்றிக் கொண்டு தன்னை ஒரு பெண்ணாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குற்றவியல் பின்னணி ஏதும் இல்லாத ராபின் வெஸ்ட்மேன் ஏன் துப்பாக்கியால் சுட்டார் என்று தெரியாத நிலையில், இது ஒரு உள்நாட்டுப் பயங்கரவாதச் செயலாகவும், கத்தோலிக்கர்களுக்கு எதிரான வெறுப்பு அடிப்படையிலான குற்றமாகவும் விசாரிக்கப்பட்டு வருவதாக FBI இயக்குனர் காஷ் படேல் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, வெஸ்ட்மேனின் சமூக ஊடகக் கணக்குகளில் அவரது டைரியின் வீடியோக்கள் கிடைத்துள்ளன. இந்த வீடியோக்களில் குழந்தைகளைக் கொல்வது பற்றி எழுதப்பட்டுள்ளது. யூடியூப்பில் இருந்து அந்த வீடியோக்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
“ப்ரீவிக்” என்ற குறிப்பும் உள்ளது. 2011-ல் நோர்வேயில் 77 பேரைக் கொன்ற ப்ரீவிக் என்பவரின் பெயரும், 2018-ல் பிட்ஸ்பர்க் ஜெப ஆலயத்தில் 11 பேரைக் கொன்ற ராபர்ட் போவர்ஸின் பெயரும் துப்பாக்கிகளில் எழுதப்பட்டுள்ளது.
வீடியோவில் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் மற்றும் நிரப்பப்பட்ட பத்திரிகைகள் குவிந்து கிடக்கிறது. அதில் “இப்போது டிரம்பைக் கொல்லுங்கள்”, “இஸ்ரேல் விழ வேண்டும்” மற்றும் “இஸ்ரேலை எரிக்கவும்” என்ற சொற்றொடர்கள் இடம்பெற்றன.
வீடியோவில் காட்டப்படும் துப்பாக்கிகளில், “Nuke India”, “Israel must fall” and “Mashallah” என்றும் எழுத பட்டுள்ளது. மேலும்,வெஸ்ட்மேனின் குறிப்பேட்டில் இருந்த தேவாலயத்தின் வரைபடத்தைக் கத்தியால் குத்துவதும் வீடியோவில் உள்ளது.
இதன் மூலம்,ராபின் வெஸ்ட்மேனுக்கு இந்திய-எதிர்ப்பு மற்றும் யூத-எதிர்ப்பு மற்றும் அடிப்படைவாத இஸ்லாமிய தாக்கம் இருந்ததாகவும் தெரியவருவதாகக் கூறப் படுகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதைச் செலுத்தும் விதமாக வெள்ளை மாளிகையில் அமெரிக்கக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
நாட்டில் மக்களை விட அதிகமான துப்பாக்கிகள் உள்ளதாகக் கூறிய மினியாபோலிஸ் மேயர் ஜேக்கப் ஃப்ரே, மீண்டும் இது போன்ற சம்பவங்கள் நடக்க அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.