பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்த மத்திய அரசுக்கு தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்தியா மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பை தொடர்ந்து, பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி விலக்கை டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் சார்பில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் செய்தியாளர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க தலைவர் எஸ்.கே.சுந்தரராமன், துணைத் தலைவர் ரவிசாம், செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க பிரதிநிதிகள், பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கை நீட்டித்துள்ள மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
இந்த அறிவிப்பு அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்படும் ஜவுளித்துறைக்கு ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது எனவும் கூறினர்.
இதனைத் தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன், பருத்திக்கான இறக்குமதி வரி விலக்கு டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டது ஜவுளி துறையின் சவால்களை சமாளிக்க உதவும் என தெரிவித்தார்.