புதுச்சேரி அருகே கார் மோதியதில் இருசக்கர வாகனத்துடன் நபர் ஆற்றில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி – கடலூர் சாலை நோனாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சுண்ணாம்பாறு பாலத்தில் சென்று கொண்டிருந்த கார், முன்னே சென்ற பள்ளி வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டது. அப்போது, எதிர் திசையில் வந்து கொண்டிந்த 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், இருசக்கர வாகனத்துடன் ஒருவர் ஆற்றில் தூக்கி வீசப்பட்டார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் விழுந்த நபரை ஒரு மணி நேர தேடுதலுக்குப் பின்னர் சடலமாக மீட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த நபரின் சடலத்தை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கார் ஓட்டுநரை கைது செய்து செய்த போலீசார், மதுபோதையில் கார் ஓட்டினாரா என்பதை அறிய மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், விபத்தில் உயிரிழந்த நபர் கடலூரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் என தெரிவித்தனர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பெண் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்து காரணமாக புதுச்சேரி – கடலூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.