நடப்பு கல்வியாண்டில் ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளிகள் பின்தங்கியுள்ளன. 5 லட்சத்து 26 ஆயிரம் மாணவர்களுடன் தனியார் பள்ளிகள் முன்னிலையில் வகிக்கின்றன.
தமிழகத்தில் உள்ள 58 ஆயிரத்து 924 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒரு கோடியே 21 லட்சம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
ஆண்டுதோறும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிந்து வரும் நிலையில், நடப்பு கல்வியாண்டில் 37 ஆயிரத்து 595 அரசு பள்ளிகளில் 2 லட்சத்து 39 ஆயிரத்து 290 மாணவர்கள் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
8 ஆயிரத்து 335 அரசு உதவி பெறும் பள்ளிகளில் 86 ஆயிரத்து 63 மாணவர்களும்,
12 ஆயிரத்து 929 தனியார் பள்ளிகளில் 5 லட்சத்து 26 ஆயிரத்து 52 மாணவர்களும் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதில், அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் 2 லட் சத்து 86 ஆயிரத்து 762 மாணவ, மாணவிகள் கூடுதலாக சேர்ந்துள்ளதாகவும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்த்தால் கூட 2 லட்சத்து 699 பேர் கூடுதலாக தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்பு வசதிகளை அரசு பள்ளிகளில் ஏற்படுத்தி தந்தாலே, மாணவர்களின் எண்ணிக்கையை தக்கவைத்துக் கொள்ள முடியும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.