சிவகங்கையில் பாஜக பிரமுகர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
சிவகங்கை வாரச்சந்தை காவலர் குடியிருப்பு பகுதியில் இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை நடத்தி வந்த சதீஷ் என்பவர் பாஜகவின் சிவகங்கை நகர் வர்த்தக பிரிவு தலைவராக பதவி வகித்து வந்துள்ளார்.
இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை அறையை வாடகைக்கு எடுத்து தங்கிவந்த சதீஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது சதீஷ் அறையின் அருகே தங்கியிருந்த சில நபர்களுக்கும் சதீஷ் தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சதீஷை அந்த கும்பல் தாக்கி தள்ளிவிட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.