அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த டிரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இருநாட்டு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதற்காக புதின் அமெரிக்காவுக்கு வருகை தந்தபோது, வரவேற்கக் காத்திருந்த ட்ரம்ப், சற்று உடல்நலம் குன்றியவாறு காணப்பட்டார். அவரது நடையில் தொய்வு தெரிந்ததை அடுத்து பலரும் விமர்சிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் அமெரிக்க பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ட்ரம்ப் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், இரவு பகல் பாராமல் டிரம்ப் நாட்டுக்காக உழைப்பதாக தெரிவித்தார். அந்த சோர்வின் காரணமாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டது போன்று தோற்றம் அளித்திருக்கலாம் என்றும், மற்றபடி யாரும் நம்ப முடியாத அளவுக்கு அவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும் ஜே.டி.வான்ஸ் தெரிவித்தார்.
மீதமுள்ள பதவிக்காலத்தை ட்ரம்ப்நிச்சயம் நிறைவு செய்வார் என உறுதியாக கூறிய ஜே.டி.வான்ஸ், ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால் அதிபராக பொறுப்பேற்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். ஜே.டி.வான்சின் இந்த கருத்து, மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.