தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாகப் பணியாற்றிவந்த சங்கர் ஜிவால் ஐபிஎஸ் இன்று ஓய்வுபெற்றுள்ள நிலையில் அவர் கடந்து வந்த பாதையைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் ஜிவால் 1990 ஆம் ஆண்டு UPSC தேர்வில் வெற்றிப் பெற்று ஐ.பி.எஸ் அதிகாரியாகப் பணியில் இணைந்தார்.
தமிழ், ஆங்கிலம், குமாவோனி ஆகிய மூன்று மொழிகளில் புலமைப் பெற்ற சங்கர்ஜிவாலுக்கு 1991 ஆம் ஆண்டு தமிழகத்தில் பணி ஒதுக்கப்பட்டது.
1993 ஆம் ஆண்டு மன்னார்குடியில் உதவி காவல் கண்காணிப்பாளராகப் பணியை தொடங்கிய சங்கர்ஜிவாலுக்கு 1995ம் ஆண்டு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ப் பொறுப்பு வழங்கப்பட்டது.
1996ம் ஆண்டு அப்போதைய ஆளுநரின் காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்த சங்கர் ஜிவால் 1999ஆம் ஆண்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
திருச்சி நகரத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளர், சென்னையில் உளவுத்துறைக் காவல் கண்காணிப்பாளர், சிறப்பு பணிப்படையின் ஐஜி எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
2021ம் ஆண்டு சென்னைப் பெருநகர காவல்துறையின் ஆணையராக நியமிக்கபப்ட்ட சங்கர்ஜிவால், 2023ம் ஆண்டு தமிழகக் காவல்துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
2021 மற்றும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் நிகழாத வண்ணம் சட்டம் ஒழுங்கைச் சீரமைத்த பெருமைக்குரியவர் ஆவார்.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகள் கைது. கோவை நகைக் கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் கைது எனப் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
2022- 23 ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான ஆன்லைன் மோசடி வழக்குகளை பதிவு செய்து கோடிக்கணக்கான தொகையை மீட்டுக் கொடுத்ததில் சங்கர்ஜிவாலுக்குப் பெரும்பங்கு உண்டு.
காவலர்களுக்கு மனநல ஆலோசனை, ஓய்விட வசதிகள், மக்கள் காவலர் நண்பர் திட்டம், சமூகக் காவல் மேம்பாடு, சிசிடிவி கண்காப்பு போற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார்.
காவல்துறையில் சிறப்பான பணியை ஆற்றியதற்காகச் சங்கர்ஜிவால் இரண்டு முறை குடியரசுத் தலைவர் காவல் பதக்கத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.