இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லகண்ணு கடந்து வந்த அரசியல் பாதையைப் பார்ப்போம்.
ஸ்ரீவைகுண்டத்தில் 1925ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி ராமசாமி – கருப்பாயி தம்பதிக்குப் பிறந்த மூன்றாவது மகன் நல்லகண்ணு ஆவார்.
பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக அறியப்பட்ட நல்லகண்ணு அதன்பின் கம்யூனிஸ்ட்டாக மாறத் தொடங்கினார்.
1943ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு இன்றுவரைச் சுமார் 80 ஆண்டுகளாக அதே கட்சியில் இருந்து வருகிறார்.
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு மாணவர்களைத் திரட்டி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சில ஆண்டுகளில் அவருக்கு முதன்முதலில் கிளைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதன் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கமிட்டி செயலாளர், விவசாயச் சங்கத்தின் மாநிலச் செயலாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார்.
உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற போராட்டத்தை முன்னெடுத்துக் கைதான நல்லகண்ணுவுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
சிறைத் தண்டனை முடித்துச் சிறையில் இருந்து வெளிவந்த நல்லகண்ணுவுக்கு ரஞ்சிதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாயச் சங்கத்தின் பணிகளே முக்கியமானதாகவும் பிரதானமாகவும் அமைந்துள்ளது.
1980ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட நல்லகண்ணு தோல்வியைத் தழுவினர்.
1999ம் ஆண்டு கோவையில் சிபி ராதாகிருஷ்ணனை எதிர்த்து போட்டியிட்ட நல்லகண்ணு 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதை எதிர்த்து கடந்த 2010 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் தனது 86வது வயதில் தானே ஆஜராகி நல்லகண்ணு வாதாடினார்.
தமிழுக்கும், தமிழினத்திற்கும் பெருமைத் தேடி தந்ததற்காகத் தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது கடந்த 2024 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.
கொள்கை வேறுபாடுகளைக் களைந்து அனைத்துக் கட்சி தலைவர்களாலும் மதிக்கப்படக் கூடிய தலைவராக நல்லகண்ணு திகழ்ந்து வருகிறார்.
100வயதைக் கடந்த நல்லகண்ணுவுக்குச் சொந்த வீடு கிடையாது என்பதோடு கம்யூனிஸ்ட் கட்சி வழங்கும் ஊதியத்தைத் தவிர வேறு எந்த வருமானமும் கிடையாது.