நீண்ட காலமாகவே பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த ஜம்மு காஷ்மீரில் புதிய நம்பிக்கையின் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒற்றுமை மற்றும் அமைதியின் கொண்டாட்டமாக, முதல் முறையாகக் காஷ்மீரின் புல்வாமாவில் ராயல் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் உற்சாகமாகத் தொடங்கி இருக்கின்றன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி, புல்வாமா அமைதியாகவே விடிந்தது. பிற்பகல் 3.30 மணிக்குப் பிறகு ,உலகத் தலைப்புச் செய்தியாகப் புல்வாமா இடம் பெற்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் பயங்கரவாத தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.
CRPF வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது, வெடிபொருட்கள் நிரப்பிய மாருதி சுசுகி ஈக்கோ வாகனத்தை மோதச் செய்து இந்தப் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தக் கொடூரத் தாக்குதலில் 40 CRPF வீரர்கள் கொல்லப் பட்டனர்.
இதற்குப் பதிலடியாக, பிப்ரவரி 19ம் தேதி ஆப்ரேஷன் பந்தர் நடவடிக்கையை இந்தியா எடுத்தது. பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ -முகமது பயங்கரவாத முகாம் மீது இந்தியா விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.
எல்லைக் கட்டுப் பாட்டு கோட்டைத் தாண்டி பறந்து இந்திய போர் விமானங்கள் ஏவுகணைகள் வீசி, பயங்கர வாதிகளின் முகாம்களை அழித்தன. இப்படி ஒருகாலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கோட்டையாகத் திகழ்ந்த புல்வாமாவில் இப்போது, அமைதி திரும்பியிருக்கிறது.
கிரிக்கெட் – தேசப் பற்றை ஊட்டும் உற்சாகத் திருவிழா ஆகும். இந்தியாவை ஒன்றிணைக்கும் ஒரே விளையாட்டு ஆகும். நம்பிக்கை இழந்து பயங்கரவாத பிடியில் சிக்கிய காஷ்மீரில் கிரிக்கெட் புதிய சரித்திரத்தை எழுதத் தொடங்கி இருக்கிறது. காஷ்மீர் வரலாற்றில் முதல்முறையாக, ராயல் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் புல்வாமாவில் நடைபெறுகின்றன.
பகல்-இரவு கிரிக்கெட் போட்டிகளைக் காண ஏராளமான மக்கள் ஸ்டேடியத்தில் ஆரவாரத்துடன் கூடியுள்ளனர். இந்தப் போட்டிகளில்,மாநிலம் முழுவதும் இருந்து 12 அணிகள் பங்கேற்றுள்ளன.
நம்பிக்கை இழந்து, சோர்வடைந்து இருக்கும் காஷ்மீர் இளைஞர்களுக்கு இது ஒரு புதிய தொடக்கம் என்று புல்வாமா மக்கள் ஜனநாயகக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வஹீத்-உர்-ரஹ்மான் பாரா தெரிவித்துள்ளார். மேலும், வருங்காலத்தில் கிரிக்கெட் போட்டிகளை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
முதல் போட்டியில், ராயல் குட்வில் மற்றும் சுல்தான் ஸ்பிரிங்ஸ் பாரமுல்லா அணியின் வீரர்கள் மைதானத்துக்குக் களமிறங்கிய போது, காற்றிலும் புதிய உற்சாகம் கலந்திருந்தது.
போட்டியின் ஒவ்வொரு ஷாட்டிலும், ஒவ்வொரு ஓட்டத்திலும், ஒவ்வொரு விக்கெட்டிலும் நம்பிக்கைத் தெரிந்தது. ரசிகர்களின் ஆரவாரத்துடன் கொடிகளை அசைத்து விளையாட்டைகொண்டாடினார்கள். முதல் ஆட்டத்தில் ராயல் குட்வில் அணி வெற்றிப் பெற்றது. உண்மையில், முதல் முறையாக அற்புதமான கிரிக்கெட்டைக் கண்டு மகிழ்ந்த ரசிகர்கள் தாங்களே வெற்றிப் பெற்றதாக உணர்ந்தார்கள்.
ராயல் பிரீமியர் லீக் ஒரு அற்புதமான தொடக்கமாக அமைந்துள்ளது. திறமையுள்ள காஷ்மீரின் இளம் வீரர்களுக்கு, இது ஒரு தளமாக அமைந்துள்ளது. இதன் மூலம், மாநில அணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு திறக்கப்படுகிறது. காஷ்மீரின் இளம் விளையாட்டு வீரர்கள், நாட்டின் நீல நிற ஜெர்சியை ஒரு நாள் அணியும் கனவையும் நிஜமாக்கப் போகிறார்கள்.
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த ஹீரோ காஷ்மீரில் இருந்து வரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையே புல்வாமா ராயல் பிரீமியர் லீக் சுட்டிக் காட்டுகிறது.