தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை, செங்கம், ஆரணி, போளூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில், ஊர்வலமாக சிலைகள் எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இதேப்போல், வேலூரில் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் காவல்துறை பாதுகாப்புடன் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மேள, தாளங்களுடன் ஆடி, பாடி உற்சாகமடைந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இந்து முன்னணி சார்பில் பலத்த பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சிலைகள் அனைத்தும் நீரில் கரைக்கப்பட்டன.
புதுக்கோட்டையில் தாரை, தப்பட்டை, ஆட்டம் பாட்டத்துடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைதொடர்ந்து விநாயகர் சிலைகள் அனைத்தும் புது குளத்தில் கரைக்கப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. வாலாஜாபேட்டையின் பல்வேறு பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதையடுத்து இந்து மக்கள் கட்சி சார்பில் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் அப்பகுதியில் உள்ள ஏரியில் கரைக்கப்பட்டன.