மாறிவரும் உலகப் பொருளாதார நிலைகளுக்கு மத்தியில், பாரதப் பிரதமர் மோடியின் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்று இருநாடுகளுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பிரதமர் குறிப்பிட்டது போல அமைதி வளம் வளர்ச்சிக்காக இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக இணைந்து செயல்பட்டு வரும் வேளையில், அடுத்த 10 ஆண்டுகளில் ஜப்பானிலிருந்து 10 டிரில்லியன் யென் முதலீடு பெற இலக்கு நிர்ணயித்துள்ளது பாரதப் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளமிட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜப்பானிலிருந்து பெறப்போகும் முதலீடுகளால் நமது தமிழகத்தைச் சார்ந்த சிறு குறு நிறுவனங்கள் மிகுந்த பயனடையும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதுகாப்பு, கூட்டு கடன் வழிமுறை ஆகியவற்றில் ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டதுடன், கப்பல் கட்டுமானம், புல்லட் ரயில், செயற்கை நுண்ணறிவு, செமி கண்டக்டர் ஆகிய துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் என்று அறிவித்திருப்பது இந்திய முன்னேற்றத்தின் முக்கிய மைல்கல் என்றே கூறலாம் என அவர் கூறியுள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரக் கனவை நோக்கிய பாரதத்தின் பயணத்தை வலுப்படுத்தும் முக்கிய பயணமாக நமது மாண்புமிகு பிரதமரின் ஜப்பான் பயணம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.