சென்னைக் குரோம்பேட்டை அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தால் தாம்பரம் – சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஆந்திராவில் இருந்து சென்னைக் கோவிலம்பாக்கத்திற்கு சிமெண்ட் பவுடர் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சுமார் 50 டன் சிமெண்ட் எடையுடன் 60 அடி நீளம் கொண்ட கண்டெய்னர் லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விழுந்ததால் வேறு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு தடுப்புகள் அமைத்து வாகனங்களை மேம்பாலம் வழியாகச் செல்ல அனுமதித்தனர்.
லாரியின் டேங்க் உடைந்து சாலையில் டீசல் வெளியேறியதால் தீ விபத்து ஏற்படாமல் இருக்கத் தீயணைப்புத் துறையினர்ப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, 3 கிரேன்களின் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி மீட்கப்பட்டது.