செப்டம்பர் மாத இறுதிக்குள் இரண்டு தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளதாகப் பாதுகாப்பு செயலாளர் ஆர்.கே.சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படையில் மிக்-21 போர் விமானத்தின் சேவை அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது.
இந்திய விமானப்படையின் முதல் சூப்பர்சோனிக் போர் விமானமான மிக்-21 போர் விமானத்திற்கு மாற்றாகத் தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைய உள்ளன.
இதற்காக இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்திடம் மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. விமானப்படையில் ஏற்கெனவே 40 தேஜஸ் போர் விமானங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இலகு ரகமான தேஜஸ் மார்க் 1ஏ ஜெட் விமானங்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது.
முற்றிலும் உள்நாட்டுத் தயாரிப்பான இந்த மார்க் 1 ஏ விமானங்களில் 65 சதவீதத்துக்கும் மேல் உள்நாட்டுத் தயாரிப்பு பொருட்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய பாதுகாப்புத்துறைச் செயலாளர் ஆர்.கே சிங், செப்டம்பர் மாத இறுதிக்குள் இரண்டு தேஜஸ் மார்க் 1 ஏ ஜெட் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணையும் எனத் தெரிவித்தார்.
தேஜஸ் விமானங்கள், சுகோய் விமானங்களுடன் இணைந்து இந்திய விமானப்படைக்குப் பாதுகாப்பு அறனாக மாறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் பாதுகாப்பு தேவைகளை உள்நாட்டுத் தயாரிப்புகளின் மூலம் பூர்த்தி செய்வதே மத்திய அரசின் நோக்கம் என்றும் வி.கே.சிங் தெரிவித்தார்.