பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான அந்நிய முதலீட்டை இந்தியா பெறவுள்ளது. இது சாத்தியமானது எப்படி? என்பது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 விழுக்காடு வரிவிதித்துள்ளதால் ஏற்றுமதியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இரண்டுநாள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி.
அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், ஜப்பான் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்மூலம் தேச நலனில் எத்தகைய சமரசத்துக்கும் இடமில்லை என்பதை அமெரிக்க அதிபர் ட்ரம்புக்குப் பிரதமர் மோடி உணர்த்தியிருப்பதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
புவிசார் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்தப் பயணத்தால் இந்தியாவுக்குப் பல நன்மைகள் கிடைத்துள்ளன. பில்லியன் கணக்கான டாலர் மதிப்புடைய பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தாகியுள்ளன.
தொழில்நுட்பம், அரிய வகைக் கனிமங்கள், விண்வெளி ஆய்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனிதவள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் ஜப்பானும் சேர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
செமி கண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு, கழிவுநீர் மேலாண்மைப் போன்றவற்றில் இருநாடுகளும் இணைந்து பயணிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக வெளியுறவுத்துறைத் தெரிவித்துள்ளது.
மேலும் ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரம் திறன்மிகு இந்தியர்களைப் பணிக்காக ஜப்பானுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திறமைவாய்ந்த இந்திய இளைஞர்கள் ஜப்பானில் பணியாற்றும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இவைத் தவிர அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதாரப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, ராணுவம் உள்ளிட்ட 8 முக்கியத் துறைகளில் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்தியாவின் பெருமைகளில் ஒன்றாகக் கருதப்படும் சந்திரயான் திட்டத்தில் ஜப்பானும் இணைந்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான் 5’ என்ற PROJECT-ஐ செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
அதற்காக இந்தியா தயாரித்துள்ள LUNAR LANDER-ஐ ஜப்பானின் H 3 – 24 L ராக்கெட் சுமந்து செல்லுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாடு தயாரித்துள்ள LUNAR ROVER-ம் உடன் அனுப்பப்படவுள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் 5 புள்ளி 96 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இந்தியாவில் முதலீடு செய்ய ஜப்பான் ஒப்புக்கொண்டிருப்பதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 11 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைத்தன்மை மற்றும் வெளிப்படையான நிர்வாகம் மூலம் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால் இங்கு முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக லாபத்தைப் பெற்றுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.
இந்தியா நம்மை மட்டுமே நம்பியில்லை என்பதை இனியாவது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புரிந்துகொள்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.