பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு சீனாவின் தியான்ஜின் நகரத்தில் நடைபெறுகிறது. 7 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி சீனா சென்ற நிலையில், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை உன்னிப்பாக கவனித்து வருகின்றன…
அமெரிக்க வரி விதிப்பு சர்வதேச அளவிலான பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ள நிலையில், சீனாவின் துறைமுக நகரமான தியான்ஜினில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறுகிறது 25வது ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு…
7 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி சீனா சென்றிருப்பதன் மூலம், இந்தியா – சீனா உறவு புதுப்பொலிவு பெற்றுள்ளது. இந்த மாநாட்டில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மத்திய கிழக்கு, தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் என 20 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
எல்லையில் நிலவும் பதற்றங்களை தணிப்பது, இந்தியா மீதான அமெரிக்காவின் வரி விதிப்புக்கு மத்தியில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும் சந்திப்பது எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளன…
இது ஒருபுறம் இருந்தாலும், தலைநகர் பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களை தவிர்த்து, தியான்ஜினில் மாநாடு நடைபெற காரணம் என்ன என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. பெய்ஜின், ஷாங்காய்-க்கு அடுத்த பெருநகரமாக பார்க்கப்படும் தியான்ஜின், மேற்கு உலக நாடுகளால் அதிகம் அறியப்படாத நகரமாக இருந்தாலும், சீனாவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமாக விளங்குகிறது.
5000 ஆண்டுகள் சீன நாகரிகத்தை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் சியானை பாருங்கள், ஆயிரம் ஆண்டுகால நாகரிகத்தை பார்க்க விரும்பினால் பெய்ஜிங்கை பாருங்கள்… அதே நேரம் நவீன சீனாவை பார்க்க வேண்டுமெனில் தியான்ஜினை பாருங்கள் என்பது சீனாவின் பிரபலமான பழமொழி….
1860 மற்றும் 1945ம் ஆண்டுகளுக்கு இடையே சீனாவிடம் இருந்து தனித்திருந்த தியான்ஜின் பன்னாட்டு ராணுவ அரசாங்கத்தின் தாயகமாகவே அறியப்பட்டது. ஆனால் தற்போதோ தியான்ஜின், நவீன வர்த்தக மையம் மட்டுமின்றி, உலகிலேயே 10வது பெரிய துறைமுகமாகவும் விளங்குகிறது. தியான்ஜின் துறைமுகத்திற்காக மட்டும் பெயர் பெற்றதல்ல, பெய்ஜிங்கிற்கு அரிசி வழங்கும் மையமாகவும், முக்கிய தொழில்துறை தளமாகவும், உயர் தொழில்நுட்ப மையமாகவும் திகழ்கிறது…
ஏர்பஸ், மோட்டோரோலா, மிட்சுபிஷி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் தியான்ஜினில் உள்ளன. கடந்த பத்தாண்டுகளில் இந்த நகரம் உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. தியான்ஜின் சென்றால் போதும், இங்கிருந்தபடி உலகையே காணமுடியும் என்கிறார்கள் சீனர்கள்…
2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தியான்ஜின் துறைமுகத்தில் இரண்டு பெரிய விபத்துகள் நடந்தது தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது. 170-க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட இந்த விபத்து சீன வரலாற்றின் மோசமாக முத்திரை குத்தப்பட்டது.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை தியான்ஜினில் நடத்துவதன் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு சீனா செய்தி ஒன்றை அனுப்பவுள்ளது. கடந்த காலத்தில் வெளிநாட்டு ஆக்கிரமிப்பில் இருந்த தியான்ஜின், இன்று சீனாவுக்கு சொந்தமானது என்பதையும், மேற்கத்திய சவால்களை எதிர்கொள்ளும் ஒரு மேடையாக மாறியிருப்பதையும் காட்டுவதாக உள்ளது.
உக்ரைன்-ரஷ்யா போர், இஸ்ரேல் – ஹமாஸ் போர், அமெரிக்காவின் வர்த்தகப் போருக்கு மத்தியில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ஒரு தரப்புக்காக அல்ல, பல தரப்புக்காக நாங்கள் நிற்கிறோம் என்று காட்டுதற்காகவும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது…
அதே நேரத்தில் சீனா தன்னை உலக சக்தியாக நிறுத்திக் கொள்ள இது ஒரு நல்ல தருணம் என்றும், சீனா எப்போதும் தன்னால் முடிந்த நண்பர்களை உருவாக்க முயற்சிக்கிறது என்பதையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு காட்டும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.