சீனா சென்றுள்ள பிரதமர் மோடி தியான்ஜின் நகரில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு நல்லுறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, சீனா சென்ற நிலையில் அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், தியான்ஜின் நகரில் சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, எல்லை பிரச்னை தொடர்பாக இருநாடுகளின் சிறப்பு பிரதிநிதிகளிடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் 2 புள்ளி 8 பில்லியன் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் பரஸ்பர நம்பிக்கை, மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் இருநாடுகளுக்கு இடையிலான உறவை முன்னெடுத்து செல்ல உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.