மிசோரத்தில் மலையை குடைந்து 52 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள ரயில் பாதையை இரு வாரங்களில் பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார்.
மிசோரம் மாநிலத்தின் சாய்ராங் – பைராபி நகரங்கள் இடையே 8 ஆயிரத்து 71 கோடி ரூபாய் செலவில் புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேறு எந்த ரயில் பாதையிலும் இல்லாத வகையில் 48 சுரங்கப்பாதைகள், 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள், சாலை செல்லும் பகுதிகளில் ஐந்து மேம்பாலங்கள், ஆறு சுரங்கப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, குராங் ஆற்றின் மீது 114 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலம், நாட்டின் இரண்டாவது பெரிய பாலமாகும். பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
இந்த ரயில் வழித்தடத்தில், ஹோர்டோக்கி, கான்புய், முகல்காங், சாய்ராங் ஆகிய ரயில் நிலையங்கள் அமைந்து உள்ளன. இதன் வாயிலாக மிசோரம் மாநில தலைநகரான ஐஸ்வால் நகருக்கு எளிதாக செல்ல முடியும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.