25 ஆயிரம் ரூபாய் செலவில் 6 மணி நேர அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, குழந்தையைக் காப்பாற்றியிருக்கிறார் மருத்துவர் ஒருவர்… இணையம் பாராட்டும் அந்த ஹீரோ யார். தற்போது பார்க்கலாம்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பெற்றோரும் அதை எதிர்பார்க்கவில்லை. வீட்டின் மொட்டை மாடியில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தைத் திடீரென மேலிருந்து கீழே விழுந்தது.
தலை மற்றும் தோள்பட்டையில் கம்பி குத்திய கடுமையான காயத்துடன் துடிதுடித்த குழந்தை ஆபத்தான நிலையில், லக்னோ கிங் ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு தேவதூதராக வந்த மருத்துவர்கள் 6 மணி நேர தொடர் அறுவைச் சிகிச்சைக்குப் பின் காப்பாற்றினர்.
இதில் இக்கட்டான சூழல் என்னவென்றால், அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவரும், நரம்பியல் நிபுணருமான அங்கூர் பஜாஜின் தாயாருக்கு அப்போதுதான் மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல், குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர் அங்கூர்ப் பஜாஜின் மனிதாபிமான செயல் அனைவரது பாராட்டையும் பெற்றது.
தனியார் மருத்துவமனையில், இந்த அறுவைச் சிகிச்சைக்கு 15 லட்சம் ரூபாய் கட்டணமாகப் பெறப்படும் நிலையில், அங்கூர்ப் பஜாஜ் மற்றும் அவரது குழுவினர் 6 மணி நேர அறுவைச் சிகிச்சைக்கு மொத்தமாக 25 ஆயிரம் ரூபாய் மட்டுமே பெற்றிருக்கிறார்கள்.
கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நரம்பியல் அறுவைச் சிகிச்சை பேராசிரியரான அங்கூர் பஜாஜ், நான்கு ஆண்டுகளுக்கும்மேலான அனுபவம் பெற்றவர். தலை மற்றும் நரம்பியல் அறுவைச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற அவர். 2018ம் ஆண்டு விமானத்தில் பயணித்த பயணியைக் காப்பாற்றியதற்காக ஆல் நிப்பான் ஏர்வேஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டவர்.
நரம்பியல் அதிர்ச்சி சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர் அங்கூர் பஜாஜ், சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் MCh பட்டம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், மருத்துவஅங்கூர் பஜாஜை பலரும் பாராட்டி வருகின்றனர்.
உண்மையான ஹீரோக்கள் எப்போதும் சூப்பர் ஹீரோ போன்ற ஆடைகளை அணிவதில்லை, சிலர் வெள்ளை நிற கோட்டையும் அணிந்திருப்பார்கள் என்று பதிவிட்டுள்ளளனர்.