இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைப்பட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனா சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும், ரஷ்ய அதிபர் புதினையும் சந்தித்துப் பேசினார். இந்த சூழலில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்தியா தற்போது இறக்குமதி வரியை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும், ஆனால் இது மிக தாமதமான ஒன்று என்றும், இதை பல ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா செய்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மற்ற நாடுகளை விட அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரியை இந்தியா வசூலித்ததாகவும், இது அமெரிக்க பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய முடியாத சூழலை ஏற்படுத்தியதாகவும், இதன் பாதிப்பு ஒருதலைபட்சமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், எண்ணெய் மற்றும் ஆயுதங்களை ரஷ்யாவிடம் இருந்து அதிகமாகவும், அமெரிக்காவிடமிருந்து குறைவாகவும் இந்தியா வாங்குவதாக கூறியுள்ள ட்ரம்ப், அதே நேரத்தில் தங்களிடம் இந்தியா அதிக பொருட்களை விற்பதாகவும் பதிவிட்டுள்ளார்.