திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் மக்கள் புகாரளித்தனர்.
துத்திப்பட்டுக் காலனியில் பிரதிஷ்டைச் செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய, நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
பெருமாள் கோயில் அருகே ஊர்வலம் சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ், ஜெய்பிரகாஷ், அருண், அருணாச்சலம், பார்த்தீபன் ஆகியோர் வழிமறித்து, சாதி ரீதியாகப் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு, 4 பேரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.
மேலும், அந்தக் கும்பல் இரவு நேரங்களில் ஆயுதங்களுடன் துத்திப்பட்டுக் காலனி பகுதியில் நடமாடியதுடன், அங்கிருந்தவர்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள், உமராபாத் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் புகார் அளித்தனர்.