ஏவுகணை வாகனங்களுக்காகப் பிரத்யேகமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் 32 BIT Micro Processor-யை உருவாக்கி விண்வெளி தொழில் நுட்பத்தில் இந்தியா சாதனைப் படைத்துள்ளது. இது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
பிரதமர் மோடியின் India Semiconductor Mission (ISM) திட்டம் 2021ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. நாட்டில் வலிமையான செமி கண்டக்டர் மற்றும் display ecosystem எனப்படும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
India Semiconductor Mission மின்னணு உற்பத்தி மற்றும் வடிவமைப்புக்கான உலகளாவிய மையமாக நாட்டை நிலைநிறுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தத் திட்டத்துக்கு 76,000 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைத் திட்டத்தின் கீழ் செமிகண்டக்டர் சிப் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க 65,000 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள India Semiconductor Mission மற்றும் உலகளாவிய குறைக்கடத்தி தொழில் சங்கமான SEMI ஆகியவை இணைந்து SEMICON INDIA 2025 மாநாட்டை நடத்துகிறது.
மின்னணு உற்பத்தி, செமி கண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் புதுமை ஆகியவற்றில் இந்தியா தலைமை தாங்க வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்காகச் செமிகான் இந்தியா மாநாடு தொடர்ந்து நடத்த பட்டு வருகிறது.
டெல்லியின் யஷோபூமியில் செமிகான் இந்தியா 2025ஐ தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவுடன் சேர்ந்து செமிகண்டக்டர் எதிர்காலத்தை உருவாக்க உலகம் தயாராக உள்ளதாகத் தெரிவித்தார். எண்ணெய் “கருப்பு தங்கம்” என்று கூறப்படுகிறது என்றும், ஆனால் chip- கள் டிஜிட்டல் “வைரங்கள்” எனக் குறிப்பிடப்படுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, செமிகண்டக்டர்த் துறையில் இந்தியா முன்னேறி வரும் வேகத்துடன், இந்த டிரில்லியன் டாலர்ச் சந்தையில் குறிப்பிடத்தக்கப் பங்கைப் பெறும் என்றும் கூறினார்.
உலகளாவிய செமி கண்டக்டர்ச் சுற்றுச்சூழல் அமைப்பில் இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுத்துவதே SEMICON இந்தியாவின் நோக்கமாகும். தெற்கு ஆசியாவின் செமி கண்டக்டர் மற்றும் மின்னணு தொழில்களுக்கான மிகப்பெரிய தளமாக இந்த மாநாடு அமைந்துள்ளது.
“அடுத்த தலைமுறைச் செமி கண்டக்டர்ச் சக்தி நிலையமாக நாட்டை உருவாக்குதல்” என்ற கருப்பொருளில் இந்தத் துறையில் நாட்டின் முன்னேற்றத்தை வெளிக்காட்டும் விதமாக இந்த மாநாடு நடைபெறுகிறது.ஏவுகணை வாகனப் பயன்பாடுகளுக்காக பிரத்யேகமாக
வடிவமைக்கப்பட்ட இரண்டு 32-BIT Micro Processorகள் VIKRAM 3201 மற்றும் KALPANA 3201 ஆகியவை இந்த மாநாட்டில் அறிமுகப்படுத்த பட்டுள்ளன. இது, இந்தியாவின் விண்வெளி மின்னணுவியல் துறையில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.
விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் (VSSC) வடிவமைக்கப்பட்டு, சண்டிகரில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட VIKRAM 3201 Micro Processor, முந்தைய 16-BIT VIKRAM 1601 சிப்பின் அடுத்த தலைமுறை வளர்ச்சி ஆகும்.
இது ஏவுகணை வாகனங்கள் கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்வெளி பயணங்களின் போது தொடர்ச்சியான கட்டுப்பாட்டுச் செயல்பாடுகள் மற்றும் வழிசெலுத்தல் ஆகிய திறன்களை இந்த Micro Processor உறுதி செய்கிறது. மேலும், இது 55 டிகிரி செல்சியஸ் முதல் 125 டிகிரி செல்சியஸ் வரைத் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்டதாகும்.
இது விண்வெளி வாகனத்தின் பாதையைக் கணக்கிடுதல், சென்சார் தரவை பகுப்பாய்வு செய்தல் மற்றும் 3D கிராபிக்ஸ்களை வழங்குவதில் மேம்பட்ட உதவிகளைச் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
KALPANA 3201 என்பது திறந்த மூல மென்பொருள் கருவித்தொகுப்புகளுடனும் ஒருங்கிணைந்த மேம்பாட்டுச் சூழலுடனும் இணக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விமான மென்பொருளுடன் சோதிக்கப்பட்டுள்ள இந்த Micro Processor, விண்வெளி தொழில் நுட்பத் துறையில் பல்வேறு பயன்பாடுகளுக்கான பல்துறைத் திறன் கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே 6 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகள் உள்ளன. மேலும் 4 செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைகளை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 79-வது சுதந்திரத் தினவிழாவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சிப்-கள் சந்தைக்கு வந்துவிடும் என்றும் செமி கண்டக்டர் உற்பத்தி துறையில் இந்தியாவின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்கவே முடியாது என்றும் கூறியிருந்தார்.
2030ம் ஆண்டுக்குள் இந்திய செமி கண்டக்டர் வருவாய் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,உலகளாவிய செமி கண்டக்டர் சந்தையில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் செமி கண்டக்டர் துறை வெற்றி என்பது, எதிர்காலத்தில் மேலும் தன்னிறைவு பெற்ற மேம்பட்ட விண்வெளிப் பயணங்களுக்கு வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது.