பெய்ஜிங்கில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் கலந்து கொள்வதற்காக விமான பயணத்தைத் தவிர்த்து வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தமது பிரத்யேகமான பச்சை ரயிலில் பயணம் மேற்கொண்டார். அதி நவீனப் பாதுகாப்பு வசதிகள் கொண்ட இந்த ரயிலின் சிறப்பம்சங்கள் என்னென்ன ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் இல் சுங் கடந்த 1986-ல் சோவியத் யூனியனுக்குப் விமானத்தில் சென்றார். கடந்த 30 ஆண்டுகளில், வட கொரிய அதிபர் ஒருவர் அதிகாரபூர்வமாக மேற்கொண்ட விமானம் பயணம் இதுதான் என்பது குறிப்பிடத் தக்கது.
கிம் இல் சுங், 1994-ல் இறக்கும் வரைத் தனது ஆட்சியில் ரயிலில் தான் வெளிநாடுகளுக்குச் சென்றார். அதன்பிறகு வடகொரிய அதிபர் எவரும் அதிகாரபூர்வ விமான பயணங்களை மேற்கொண்டதில்லை.
தாத்தாவைப் போலவே, கிம் ஜாங் உன்னின் தந்தைக் கிம் ஜாங் இல்-க்கும் விமான பயணத்தின்மீது அச்சம் இருந்தது. 2001-ல் புதினைச் சந்திக்க 10 நாட்கள் அவர் ரயிலில் பயணித்தார். 2011ம் ஆண்டின் பிற்பகுதியில் தனது ரயில்பயணத்தின் போது மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. அவர் பயன்படுத்திய இரயில் பெட்டி இப்போதும் அவரது கல்லறையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் படித்த தற்போதைய வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னைப் பொறுத்தவரை, படிக்கும் போது அடிக்கடி விமான பயணங்களை மேற்கொண்டவர் என்றாலும், அவருக்கும் விமான பயணத்தின் மீது அச்சம் என்று கூறப்படுகிறது. எனவே, 2011-ல் வடகொரிய அதிபராக பதவியேற்றத்தில் இருந்து பெரும்பாலும் தனது தொலைதூரப் பயணங்களுக்கு கிம் ஜாங் உன் ரயிலையே தேர்வு செய்கிறார்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கிம் ஜாங் உன் நான்கு முறைச் சீனாவுக்கும், தலா ஒரு முறை ரஷ்யாவுக்கும், வியட்நாமுக்கும், சிங்கப்பூருக்கும் என மொத்தம் ஏழு சர்வதேச பயணங்களை இந்த ஆலிவ் பச்சை ரயிலில் மேற்கொண்டுள்ளார்.
இதில் இரண்டு முறைத் தென் கொரியாவின் எல்லையைக் கடந்துள்ளார். வெளிநாட்டுப் பயணத்தில் பெரும்பாலும் மஞ்சள் நிறக் கோடு பொறிக்கப்பட்ட ரயிலையே கிம் பயன்படுத்துகிறார். ‘தாயாங்கோ’ என்று கிம்மின் ரயில் பெயரிடப்பட்டுள்ளது. கொரிய மொழியில் ‘தாயாங்கோ’ என்றால் ‘சூரியன்’ என்று பொருள். இது வட கொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங்கை நினைவுபடுத்தும் ஒரு சின்னமாக விளங்குகிறது.
கிம் ஜாங் உன் பயணிக்கும் இந்த ஆலிவ் பச்சை நிற ரயில் மொத்தமாக 90 பெட்டிகள் கொண்டதாகும். ஒரே ரயிலாக இல்லாமல், 90 பெட்டிகள் மூன்று ரயில்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் ரயில் அதிபர் செல்ல உள்ள பாதையில் எந்தத் தடையும் இல்லை என்பதை உறுதி செய்யவும், இரண்டாவது ரயில் அதிபர்ப் பயணம் செல்வதற்காகவும், மூன்றாவது ரயில் அதிபரின் தனிப்படைப் பாதுகாப்பு வீரர்கள் குழுவினரும் மருத்துவக் குழுவினரும் பயணம் செய்யவும் வடிவமைக்கப் பட்டுள்ளன.
ரயிலின் பெட்டிகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருப்பதுடன், செயற்கைக்கோள் தொடர்பு அமைப்புகளும் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ளன. ரயிலுக்குள் பிரத்யேக Barbeque உணவகம், ஆலோசனை அறை, படுக்கையறை, சாட்டிலைட் போன்கள் உட்பட அதிநவீன வசதிகளும் இருப்பதாகக் கூறப்டுகிறது.
இவைத் தவிர போதுமான அளவிலான ஆயுதங்களுடன், ஏவுகணைகளை வழிமறித்துத் தாக்கும் பாதுகாப்பு வசதியும் இந்த ரயிலில் உள்ளன. குறிப்பாக இக்கட்டான சூழலில் தப்பிக்க ஒரு அதிநவீன ஹெலிகாப்டரும் இந்த ரயிலில் உள்ளது. ரயில் பாதைகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, பிறநாடுகளின் எல்லைக்குள் நுழையும் போதும், திரும்பும் போதும் இந்த ரயிலின் சக்கரங்கள் மாற்றப்படுகின்றன.
மணிக்கு அதிகப் பட்சம் 60 கிலோமீட்டர் வேகத்தில் மிக மெதுவாக நகரும் இந்த இரயிலில் சீனாவுக்குச் செல்ல 20 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. அயல்நாட்டுப் பயணங்களுக்கு மட்டுமில்லாமல்,சொந்த நாட்டில் மக்களைச் சந்திப்பதற்கும், பிரச்சாரம் செய்வதற்கும், ரயிலையே பயன்படுத்துகிறார் கிம் ஜாங் உன்.
2018-ல் இளஞ்சிவப்பு சோஃபாக்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு நேர்த்தியான ரயில் பெட்டியில் கிம் ஜாங்-உன், சீன உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசும் காட்சிகள் வெளியாகி அனைவரையும் பிரமிக்க வைத்தது. 2020-ல் புயல் பாதித்த பகுதிக்குக் கிம் ஜாங்-உன் சென்ற ரயிலின் காட்சிகளை வடகொரிய அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பின.
இரயிலின் அனைத்துப் பெட்டிகளுமே குண்டு துளைக்க முடியாதவை. வெடிகுண்டு மட்டும் அல்ல ராக்கெட் லாஞ்சரால் கூட இந்த ரயிலைத் தாக்க முடியாது. இதனால் தான் இந்த ரயில் கவச ரயில் என்றும் நகரும் இரும்புக் கோட்டை என்றும் கூறப்படுகிறது.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில், இரண்டாம் உலகப் போரில் ஜப்பானைச் சரணடைய வைத்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பெய்ஜிங்கில் நடைபெறும் இராணுவ அணிவகுப்பில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கிறார். இந்த வெற்றி அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் புதினும் கலந்து கொள்கிறார்.
ஜி ஜின்பிங்- புதின்-கிம் ஜாங் உன் மூவருக்கும் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.