ராமநாதபுரத்தில் அரசு வீடு கட்டும் திட்டத்திற்கான நிதியைப் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்ட பணி மேற்பார்வையாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழபார்த்திபனூர் பஞ்சாயத்துக்குட்பட்ட வடக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ்த் தனது வீட்டைச் சீரமைப்பதற்காக விண்ணப்பித்திருந்தார்.
அதன்படி, சீரமைப்பு பணிகளுக்காக 55 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் பிரகாஷின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படவில்லை. இதையடுத்து, பரமக்குடி ஊராட்சி ஒன்றிய திட்ட பணி மேற்பார்வையாளர் ராமரைத் தொடர்புகொண்ட பிரகாஷ், இதுகுறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது பணம் வரவு வைக்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டுமென ராமர் தெரிவித்தார். இதுதொடர்பான ஆடியோ வெளியான நிலையில், சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோரிக்கை எழுந்துள்ளது.