பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்து வரும் ரஷ்யா, சுகோய் Su-57E ஸ்டெல்த் போர் விமானங்கள் தயாரிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது. இந்தியா-ரஷ்யா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் வலிமைப் பெற்றுவருவது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இந்திய விமானப்படையின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், சீனா மற்றும் பாகிஸ்தானின் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கும், ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா முடிவு செய்தது.
இந்த ஆண்டு ஜனவரியில் வெள்ளைமாளிகையில் தன்னைச் சந்தித்த பிரதமர் மோடியிடம், அமெரிக்காவின் 5-ம் தலைமுறை F -35 ரகப் போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்க ட்ரம்ப் முயற்சி செய்தார்.
ஆனால் பாதுகாப்பு ஆயுதங்களைக் கூட்டாக உருவாக்குவதிலும், குறிப்பாக உள்நாட்டில் உற்பத்தி செய்வதிலும் இந்தியா உறுதியாக இருந்தது.
தொடர்ந்து, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதைக் காரணம் காட்டி இந்தியா மீது 50 சதவீத வரியை விதித்தது அமெரிக்கா. பதிலடியாக, அமெரிக்காவின் F -35 ரகப் போர் விமானங்களை வாங்கப் போவதில்லை என்று இந்தியா திட்டவட்டமாகச் சொல்லி விட்டது.
உள்நாட்டிலேயே தயாரிக்கும் ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களுக்கே இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது. இதற்காக ஏற்கனவே ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக நிதி ஒதுக்கியுள்ளது. 2028-ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்டெல்த் போர் விமானம் தயாராகும் என்று கூறப் பட்டுள்ளது. 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவின் ஸ்டெல்த் போர் விமானம் விண்ணில் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு, இந்தியாவின் வான்வழி போர் திறன்களை மேம்படுத்தும் வகையில், ரஷ்யா, தனது அதிநவீன Su-57E ஸ்டெல்த் போர் விமானத்தை இந்தியாவுக்கு வழங்க முன்வந்துள்ளது. இந்தியாவின் ‘make in India’ திட்டத்தின் கீழ் Su-57E ஸ்டெல்த் போர் விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுகோய் -57 ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான முதலீடுகள் குறித்து ரஷ்யா ஆய்வு செய்து வருகிறது.
இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் ஏற்கெனவே ரஷ்யாவின் சுகோய் Su-30 MKI விமானங்களை நாசிக் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. இதே உற்பத்தி வசதிகளைக் கொண்டு, சுகோய் Su-57 E விமானங்களைத் தயாரிக்கும் திட்டம் பற்றி ஆராயப்பட்டு வருகிறது.
Source code உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப பரிமாற்றங்களுடன் சுகோய் Su-57E உற்பத்தியில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ரஷ்யா உறுதி அளித்துள்ளது.
ஏற்கெனவே, ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா தயாரித்த மேம்பட்ட சூப்பர்சோனிக் பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணைகள் உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்திய-ரஷ்யக் கூட்டு முயற்சியான பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம், 2030க்குள் மேலும் 200 பிரம்மோஸ் சூப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளை வழங்க உள்ளது.
மேலும், இந்திய -ரஷ்ய ரைபிள்ஸ் பிரைவேட் லிமிடெட் (IRRPL) என்ற நிறுவனம் உத்தரபிரதேசத்தின் அமேதியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ‘ஷேர்’ என்று பெயரிடப்பட்ட AK-203 துப்பாக்கிகளை இந்நிறுவனம் உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது.
2030-க்குள் இந்தியப்படைக்கு ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட AK-203 துப்பாக்கிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் துப்பாக்கி ஒரு நிமிடத்துக்கு 700 தோட்டாக்களை 800 மீட்டர் தூரம் வரை அதிவேகத்தில் செலுத்தும். AK-47 மற்றும் AK-56 ரகத் துப்பாக்கிகளுடன் ஒப்பிடும்போது AK-203 ரகத் துப்பாக்கிகள் மிகவும் அதி நவீனமானவை என்பது குறிப்பிடத் தக்கது.
2015-ல் இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் Kamov காமோவ் Ka-226T இலகுரக ஹெலிகாப்டர்களைக் கூட்டாக தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்முலம், இந்திய இராணுவத்துக்கு 200க்கும் மேற்பட்ட Ka-226T ரக ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவை மட்டுமின்றி, T-72 பீரங்கிகளுக்கு 1000 HP என்ஜின்களை வாங்குவதற்காக, ரஷ்யக் கூட்டமைப்பின் (Rosoboron export) ரோசோபோரோன் எக்ஸ்போர்ட் உடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் 248 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் பீரங்கி படையின் முக்கிய தூணாக 780 HP என்ஜின் கொண்ட இரண்டாயிரத்து ஐந்நூறு T-72 பீரங்கிகள் உள்ளன. இவற்றில் 1000 HP எஞ்சின் பொருத்தப்படுவது, இந்திய ராணுவத்தின் போர்க்களத் திறனை மேம்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.