ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 400-ஐ கடந்துள்ளது. தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
ஏற்கனவே, பொருளாதார மந்தநிலை, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, பாகிஸ்தானுடன் மோதல், பயங்கரவாதம் உள்ளிட்டவற்றால் அந்நாடு பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில், தன் பங்கிற்குக் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது இந்த நிலநடுக்கம்.
ஆகஸ்ட் 31ம் தேதி, நங்கர்ஹார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் பகுதியில் இருந்து 27 கிலோமீட்டர்த் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி 11.47 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரிக்டர் அளவில் 6-ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கின. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடுவதற்குள், பல கட்டங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொள்ளவே, என்ன செய்வது எனத் தெரியாமல் மற்றவர்கள் தவிக்கத் தொடங்கினர்.
இந்தக் கோர சம்பவம் நடந்து சிறிது நேரம்தான் கடந்திருக்கும். அதற்குள் மேலும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு நிலைமையை இன்னும் மோசமாக்கியது. இது ரிக்டரில் 4.7 என்ற அளவில் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் நிலநடுக்கத்தால் பலத்த சேதமடைந்தபோதும், கீழே விழாமல் நூலிழையில் தப்பித்த பல கட்டடங்கள் இந்தமுறைச் சீட்டு கட்டுபோல் சரிந்து விழுந்தன. இதில் மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டனர்.
குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் உள்ள சோகி, வாட்பூர், நூர் குல், மனோகி, சபா தாரா மாவட்டங்கள் இந்த அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
2 நாட்கள் கடந்த நிலையிலும் மீட்பு பணிகள் இதுவரை ஓய்ந்தபாடில்லை. குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அடுத்தடுத்து ஆயிரக்கணக்கில்
சடலங்கள் மீட்கப்பட்டபடியே உள்ளன. தற்போதுவரை ஆயிரத்தி 400க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சடலங்களை மீட்க ஒருபுறம் மீட்புபடைப் போராடி வருகிறது என்றால், படுகாயமடைந்தவர்களுக்குப் போதிய சிகிச்சை வழங்க முடியாமல் மருத்துவமனைகள் திணறி வருகின்றன. மருந்து தட்டுப்பாடு, மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் பலர் உரிய சிகிச்சைக் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
நிலைமையைச் சமாளிக்க முடிந்த வரைப் போராடிய தாலிபான் அரசு, உதவிக்கரம் நீட்ட வேண்டும் என உலக நாடுகளிடம் கையேந்தியது. உதவி கேட்டதுதான் தாமதம். பல்வேறு உலக நாடுகள் டன் கணக்கில் அடுத்தடுத்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து வருகின்றன. இந்தியாவில் இருந்து 15 டன் உணவுப் பொருள்கள், உயிர்காக்கும் மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள், 1,000 கூடாரங்கள் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
துரிதமான மீட்பு நடவடிக்கையால் முடிந்தவரை உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதுதான் தற்போதைக்கு பலரது எதிர்பார்ப்பு.