மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறைச் சேர்ந்த இளைஞர் வெளிநாட்டில் தற்கொலைச் செய்து கொண்ட விவகாரத்தில் தலைமறைவாக உள்ள அவரது காதலியை போலீசார் தேடி வருகின்றனர்.
தலைஞாயிறை சேர்ந்த சரத்குமார் என்பவரும், திருப்புங்கூரைச் சேர்ந்த சங்கீதா என்பவரும்10 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாகச் சரத்குமார் குவைத்தில் வேலைப் பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 29-ம் தேதி சங்கீதா, எஸ்.ஐ ஒருவரைக் காதலிப்பதாக கூறி சரத்குமாரை விட்டு விலகியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சரத்குமார் வெளிநாட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார்.
அவரது உடல் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 15 சவரன் நகை, 2 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த சங்கீதாவைக் கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தினர்.
அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவான சங்கீதாவைத் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய வைத்தீஸ்வரன்கோவில் காவல் உதவி ஆய்வாளரும் தஞ்சைக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.