தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களைக் காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபனை நியமித்துச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வழக்கறிஞர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டதாக ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது வழக்கறிஞர்களின் செயலால் அரசு சொத்துக்கள் மட்டுமின்றித் தனி நபர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப்பெற இயலாது எனவும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்ட வழக்கறிஞர்களைக் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாகவும், பெண் வழக்கறிஞர்களிடம் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டதாகவும் மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தின் போது வழக்கறிஞர்களைக் காவல்துறை தாக்கியது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபனை நியமித்து ஆணையிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி பார்த்திபன் விரைந்து விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.