2 தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்திருப்பது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டி வரும் நிலையில், அவருக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகப் பாஜக தேசிய தொழில்நுட்பத்துறைப் பொறுப்பாளர் அமித் மால்வியா எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ராகுல் காந்தியின் நெருங்கிய உதவியாளர் இரண்டு வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானாவின் கைரதாபாத் சட்டமன்ற தொகுதி வேட்பாளரும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான பவன் கேரா மற்றும் அவரது மனைவி இருவரும் 2 தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ளதை ஆதாரத்துடன் பதிவிட்டுள்ளார்.
பல காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் வைத்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வாக்காளர் பட்டியல் விவகாரத்தைக் காங்கிரஸ் கையில் எடுத்திருப்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அல்ல, அவர்களின் வாக்கு வங்கியைப் பாதுகாப்பதற்காக எனவும் விமர்சித்துள்ளார்.
இதனிடையே, 2 தொகுதிகளின் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்திருப்பது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேராவுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 8ஆம் தேதி காலை 11 மணிக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.