மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே திமுக நிர்வாகியின் உறவினர் பாலியல் தொல்லை அளிப்பதாகவும், அவர் மீது புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பெண் ஒருவர் குற்றம்சாட்டி உள்ளார்.
வைரவநத்தம் கிராமத்தில் திலகா என்பவர், கணவர் உயிரிழந்துவிட்ட நிலையில் தனது 2 குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார்.
இவர் வழக்கம் போல பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அண்டை வீட்டுக்காரரான மணிகண்டன் என்பவர் மதுபோதையில் தவறாக நடக்க முயற்சிப்பதாகவும், ஆபாச வார்த்தைகளால் பேசுவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாகக் காவல்நிலையத்தில் புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக தெரிவித்த திலகா, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தாலே உண்மைத் தெரியும் எனவும், அதனையும் போலீசார் செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
புகாரைத் திரும்பப்பெறுமாறு மணிகண்டன் மிரட்டல் விடுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குழந்தைகளுடன் தற்கொலைச் செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண் திலகா தெரிவித்துள்ளார்.