மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக அரசு முடக்கப் பார்ப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பழனி பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு, குறு தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் ஸ்வானிதி மற்றும் முத்ரா கடனுதவிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகை செய்து கொடுக்க முயன்ற திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளர் பரமேஸ்வரி அவர்களைத் பழனி திமுக நகர்மன்றத் தலைவர் உமா மகேஸ்வரி தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதிலும், “எந்த கவர்மெண்ட் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறதோ அவர்கள் சொல்வதைக் கேளுங்கள்” என்ற தொனியில் அவர் பேசியிருப்பது அதிகார மமதையின் வெளிப்பாடு. திமுகவினரின் இந்த ஆணவப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்களுக்கு பலனளிக்கும் மத்திய அரசின் நலத்திட்டங்களை ஆளும் அரசும் செயல்படுத்த மாட்டார்கள், அவற்றை மக்களிடையே கொண்டு சேர்ப்பவர்களையும் விட மாட்டார்கள் என்றால் இது என்ன விதமான மனநிலை? என கேள்வி எழுப்பியுள்ளார்-
ஒருவேளை மத்திய அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைந்து விட்டால் தங்களின் மடைமாற்று நாடகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும் என்று திமுக அரசு அஞ்சுகிறதா? திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு தமிழகத்தின் வளர்ச்சி பலியாக வேண்டுமா? என வினவியுள்ளார்.
ஆனால், திமுகவின் அத்தனைத் தடைகளையும் தகர்த்து, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடியின் சிறந்த திட்டங்கள் அனைத்தும் தமிழக மக்களுக்குக் கிடைப்பதை தமிழக பாஜக உறுதி செய்யும். அடக்குமுறைகளாலும், அதிகாரத் துஷ்பிரயோகத்தாலும் எங்களின் மக்கள் பணியைத் திமுகவால் ஒடுக்கிவிட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள் பிரச்சனைகளுக்குக் குரல் கொடுப்பவர்களையும், நலிவடைந்தோரின் நலன் விரும்பிகளையும் கண்டால் திமுகவிற்கு அப்படியென்ன ஒவ்வாமை என்பது புரியவில்லை என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.