சென்னை மாடம்பாக்கம் அருகே வாடகை வீட்டில் குடியிருந்த நபர் ஒருவர் 50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.
அண்ணா நகரை சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்கு மாடம்பாக்கம் பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை 2019-ம் ஆண்டு வேணுகோபால் என்பவருக்கு வாடகைக்கு விட்டார். அதன்படி குடியேறிய வேணுகோபால் மாதமாதம் நாய்களை வாங்கி வளர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் வீட்டை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார். இதற்கு வாடகைதாரர் மறுப்பு தெரிவித்ததால் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
அப்போது கால அவகாசம் கேட்ட வேணுகோபால் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்களை வீட்டை சுற்றிலும், வீட்டிற்குள்ளும் அடைத்துவிட்டு வேறொரு வீட்டிற்கு குடிபெயர்ந்தார். இதனால் அதிக இரைச்சல் மற்றும் துர்நாற்றம் வீசியதால் அண்டை வீட்டினர் பாதிக்கப்பட்டனர். எனவே, நாய்களை அடைத்து வீட்டை ஆக்கிரமித்துள்ள வேணுகோபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.