ராணிப்பேட்டை அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மனு அளிக்க வந்தபோது தகராறில் ஈடுபட்டதாகக் கூறி முதியவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், சாத்தூர் பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வெங்கடாபதி என்ற முதியவர் ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பாக மனு அளிக்க வந்தார்.
அப்போது அதிகாரிகள் மனுவை ஏற்க மறுத்ததாகவும், அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மனுவைப் பெற்று கொண்டு வெளியேற்ற முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, முதியவரைக் காவல் உதவியாளர் ஒருவர் தாக்கி வெளியேற்றுவது போன்ற வீடியோ வெளியானது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள காவல்துறை, நடைபெற்ற சம்பவத்தின் ஒரு பகுதி மட்டுமே வெளியாகியுள்ளதாகவும், அதனால் ஒருதலைபட்சமான கருத்துகள் பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், விஏஓ மற்றும் காவல் உதவி ஆய்வாளரை எட்டி உதைத்து, ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி, முதியவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.