ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறித்து கருத்து தெரிவித்த ஆனந்த் மகேந்திராவிடம், கார்களுக்கான ஜிஎஸ்டி சலுகையை நிறைவேற்ற மறவாதீர்கள் என இணையவாசிகள் கிண்டலடித்துள்ளனர்.
டெல்லியில் நடைபெற்ற 56ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இது குறித்து மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா எக்ஸ் தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் நுகர்வு மற்றும் முதலீட்டை அதிகரிக்கக் கூடுதல் சீர்திருத்தங்கள் தேவை என அவர் கூறியுள்ளார். கூடுதல் சீர்திருத்தங்கள் பொருளாதாரத்தை விரிவுபடுத்தி, உலகில் இந்தியாவின் குரலை உயர்த்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுவாமி விவேகானந்தரின் பொன்மொழியையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். இதற்கு இணையவாசிகள் பதில் கருத்தினை தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் படி மகேந்திரா கார்களின் விலையைக் குறைப்பீர்கள் என்று நம்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
காரின் விலை மீண்டும் அதே நிலையில் இருக்கும் வகையில் கூடுதல் மாற்றங்கள் எதுவும் செய்ய மாட்டீர்கள் என்று நம்புவதாகக் கூறியுள்ள இணையவாசிகள், ஜிஎஸ்டி சலுகையை நிறைவேற்ற மறவாதீர்கள் என்றும் கிண்டலடித்துள்ளனர்.