வெளிநாடுகளில் தெருநாய் பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை அறிந்து அதனை நம் நாட்டிலும் பின்பற்றலாம் என சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
ஆக்ரோஷமான நாய்களைத் தடை செய்வது அல்லது முறைப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது, நாடு முழுவதும் உள்ள தெருநாய் வழக்குகள் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்டு தெரு நாய் விவகாரம் தீவிரமானது எனக்கூறிய நீதிபதிகள், ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களை எங்கு பராமரிக்கப் போகிறீர்கள்? என அரசு தரப்புக்குக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ரேபிஸ் நோய் தாக்கிய நாய்களுக்காகத் தனி காப்பகங்கள் அமைக்கப்பட உள்ளதாக அரசுத் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதிகள், காப்பகங்கள் அமைக்கப்பட்டால் நாய்களுக்கு உணவளிக்கச் செல்ல யாருக்குத் தைரியம் உள்ளது? எனக் கேள்வி எழுப்பினர்.
மேலும், வெளிநாடுகளில் தெருநாய் பிரச்னைக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டுள்ளது என்பதை அறிந்து அதனை நம் நாட்டிலும் பின்பற்றலாம் என அரசுக்கு யோசனைத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டனர்.