இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இலங்கை உள்நாட்டுப்போரின் போது அந்நாட்டைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தடைந்தனர்.
இந்நிலையில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தண்டனைகளில் இருந்து விலக்களித்துள்ளது.
இதன்படி, கடந்த 2015 ஜனவரி 9-ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
இலங்கை தமிழ் அகதிகள் பயண ஆவணங்கள் அல்லது விசா இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ், தண்டனை விதிகளில் இருந்தும் மத்திய அரசு, இலங்கைத் தமிழர்களுக்கு விலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.