நெல்லை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணி நேரத்தில் காவல் ஆய்வாளரும், உதவி ஆய்வாளரும் சினிமா பாடல் பாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளராக அந்தோணி ஜெகதா மற்றும் உதவி ஆய்வாளராக (எஸ்ஐ) ஹரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது, ‘கரகாட்டக்காரன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான ‘இந்த மான் உந்தன் சொந்த மான்…’ என்ற பாடலைப் பாடியுள்ளனர்.
அந்த வீடியோவில், ஆய்வாளர் அந்தோணி ஜெகதா பாடலின் பெண் குரலுக்கும், எஸ்ஐ ஹரி ஆண் குரலுக்கும் தத்ரூபமாகப் பாடி அசத்தியுள்ளனர். தொழில்முறை பின்னணிப் பாடகர்களைப் போல இருவரும் பாட, அங்கிருந்த சக காவலர்கள் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்திய காட்சிகளும் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை பணி என்பது மிகுந்த மன அழுத்தமும், வேலைப்பளுவும் நிறைந்தது. இந்நிலையில், பொதுமக்களின் புகார்களுக்குத் தீர்வு காண வேண்டிய காவல் நிலையத்திலேயே, அதிகாரிகள் சினிமா பாடல் பாடி நேரத்தை வீணடிப்பது சரிதானா என பலர கேள்வி எழுப்பியுள்ளனர். .