சென்னை, டி.பி.சத்திரம் பகுதியில் உடல்நிலைச் சரியில்லாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதாகக் கூறி மருத்துவர் ஒருவர் மோசடி செய்ததாகப் பாதிக்கப்பட்ட பெற்றோர்க் குற்றம்சாட்டி உள்ளார்.
டி.பி சத்திரத்தை சேர்ந்த கலைவாணன், பிரசன்னகுமாரி தம்பதிக்கு ஸ்ரீஜன் என்ற 3 வயது குழந்தை உள்ளது. இந்தக் குழந்தைக்கு கடுமையான வயிற்று வலி இருந்ததால் அருகில் உள்ள ஆர்.ஆர். என்ற கிளினிக்கிற்குப் பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர் உதேஷ் கணபதி, சிறுவனுக்குக் குடலிறக்கம் ஏற்பட்டுள்ளதால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் எனவும், அதற்காக 41 ஆயிரம் ரூபாய் பணம் தேவைப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி தம்பதியிடம் இருந்து பணத்தைப் பெற்ற மருத்துவர் தனியார் மருத்துவமனைக்குக் குழந்தையை அனுப்பி வைத்துள்ளார். அங்கு சிறுவனுக்கு அறுவைச் சிகிச்சை நிறைவடைந்த நிலையில் மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாகக் கேள்வி எழுப்பிய பெற்றோரிடம் மருத்துவர் உதேஷ் கணபதி அலட்சியமாகப் பதிலளித்ததகாவும், மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் புகாரளித்த குழைந்தையின் தாய் பிரசன்னா குமாரி, மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.