சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாகக் கடைகள் போடப்பட்டுள்ளதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.
சேலம் மாவட்டத்தில் 11 உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. இந்த உழவர்ச் சந்தைகளின் நுழைவுவாயில் பகுதியில் இருந்து 100 மீட்டர் தூரத்துக்குள் வேறு எந்தக் கடைகளும் போடக்கூடாது என்பது அரசின் உத்தரவு. ஆனால், இந்த உத்தரவு வெறும் காகித அளவில்தான் உள்ளது.
சேலத்தில் உழவர்ச் சந்தைகளின் நுழைவாயில்களின் இரு பகுதிகளிலும் சாலையோர கடைகள் என்று பெயரில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் தாங்கள் மிகுந்த பாதிப்பைச் சந்தித்து வருவதாக, உழவர்ச் சந்தை விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரம் குறித்து சேலம் தாதகாப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான சிவராமன், தகுந்த ஆதாரங்களுடன் அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தார். அதன் விளைவாக, 16 பேர்க் கொண்ட அதிகாரிகள் குழு, சேலம் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் ஆய்வுகளை மேற்கொண்டது. ஆனால், அந்த ஆய்வு நடைபெறும் சமயத்தில் 11 உழவர் சந்தைகளின் நுழைவுப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளும் மூடப்பட்டு விட்டன.
சந்தைகளுக்கு வெளியே போடப்படும் கடைகளில் ஆளும் கட்சியினர் மாமூல் பெற்று வருவதாகவும், இதனால், அரசு அதிகாரிகள் இதனை கண்டும் காணாமல் இருப்பதாகவும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆளுங்கட்சியின் வசூலுக்காகத் தாங்கள் பகடைக்காயாகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளும் சரி, வியாபாரிகளும் சரி அதிகாரிகளை குற்றச்சாட்டும் நிலையில், அதிகாரிகளோ ஆளுங்கட்சியினரை அனுசரித்து சென்றால்தான் தங்களால் பணியில் தொடர முடியும் எனப் புலம்புகின்றனர். எனவே, இத்தகைய சட்டவிரோத கடைகளுக்கு துணைபோகும் ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகளுக்கான அரசு என வாயளவில் மட்டும் கூறாமல் செயல் அளவிலும் காட்ட வேண்டும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.