தஞ்சை மாவட்டம், ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்றவர்களை கைது செய்யக் கோரி, பாமக மற்றும் வன்னியர்ச் சங்கத்தை சேர்ந்தவர்கள் சாலையில் டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆடுதுறை பேரூராட்சி தலைவரான ஸ்டாலின் என்பவர் வழக்கம்போல் அலுவலகத்தில் கட்சியினருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த கும்பல், பெட்ரோல் குண்டுகளை வீசி அரிவாளால் தாக்குதல் நடத்தியது. இதில் இளையராஜா மற்றும் அருண் ஆகிய இருவர் காயமடைந்தனர்.
நல்வாய்ப்பாக ஆடுதுறை பேரூராட்சி தலைவரான ஸ்டாலின் காயமின்றித் தப்பினார். இந்நிலையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ய வலியுறுத்தி, பாமக மற்றும் வன்னியர்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிந்துள்ள போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே கொலை முயற்சி கும்பல் காரில் வந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.