ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணை வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவுக்கு அபராதமாக 25 சதவீத வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்தார். இதனால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
ஆனாலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. தொடர்ந்து ரஷியாவுடன் வர்த்தகம் செய்து வருகிறது.
இதுகுறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நமது தேவைகளுக்கு ஏற்றதை வாங்குவது நமது முடிவு என்றும் எங்கிருந்து எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு ஒன்றை அரசு தயாரித்து வருகிறது என்றும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.