எப்போதும் பிரதமர் மோடியுடன் நண்பராக இருப்பேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை வாங்குவதன் மூலம் இந்தியா, உக்ரைன் மீதான போருக்கு நிதி அளித்து ஊக்குவிக்கிறது என டிரம்ப் குற்றம் சாட்டியிருந்தார். இதற்காக இந்தியாவுக்கு மொத்தம் 50 சதவீதம் வரிவிதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு உலகளவில் முக்கியத்துவம் பெற்றதையடுத்து, இந்தியாவுடனான உறவை சீர்குலைத்து டிரம்ப் மிகப்பெரும் தவறை செய்துவிட்டதாக பெரும்பாலானோர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவுடனான உறவை மீண்டும் மீட்டெடுப்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த டிரம்ப், மோடி ஒரு சிறந்த பிரதமர் எனவும், இந்த குறிப்பிட்ட தருணத்தில் அவர் செய்வது தனக்கு பிடிக்கவில்லை எனவும் கூறினார்.
ஆனால், இந்தியாவும் – அமெரிக்காவும் சிறப்பான நல்லுறவை கொண்டுள்ளதால் கவலைப்பட ஒன்றுமில்லை எனவும் தெரிவித்தார்.