இந்தியாவில் தனது முதல் காரை மகாராஷ்டிர அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிற்கு விற்பனை செய்துள்ளது டெஸ்லா நிறுவனம்.
எலான் மஸ்கின் டெஸ்லா கார் நிறுவனம் நீண்ட காலமாகவே இந்தியாவில் கால் பதிக்க வேண்டும் எனக் கனவு கண்டது. அதன் பயனாக மும்பையின் பாந்த்ரா குர்லா வளாகத்தில் கார் விற்பனை மையத்தை சமீபத்தில் டெஸ்லா திறந்தது.
இந்நிலையில் பண்டிகை காலத்தை ஒட்டி விற்பனையை தொடங்கிய டெஸ்லா, இந்தியாவில் தனது முதல் Y மாடல் காரை மகாராஷ்டிர போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிற்கு விற்பனை செய்துள்ளது. இந்தக் காரின் ஷோரூம் விலை 60 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Y ரியர்-வீல் டிரைவ் மற்றும் Y லாங் ரேஞ்சு என இரண்டு வகைகளில் டெஸ்லா கார் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தக் கார் அதிகபட்சமாக மணிக்கு 201 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும். பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் வேகத்தை 5.9 விநாடிகளில் எட்டும் எனவும் ஒருமுறை பேட்டரியை முழுவதுமாகச் சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் வரைப் பயணிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.