சென்னை சூளைமேட்டில் மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்து பெண் உயிரிழந்ததற்கு யார்க் காரணம் என மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டுப் போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சென்னைச் சூளைமேடு வீரபாண்டி நகரில் கடந்த செவ்வாய்க்கிழமை மழைநீர் கால்வாய்க்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
அஜாக்கிரதையின் காரணமாக உயிர் பலி ஏற்பட்டதாகப் பலரும் குற்றம்சாட்டிய நிலையில், பெண் கொலைச் செய்யப்பட்டிருக்கலாம் என மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டது.
உடற்கூராய்வு அறிக்கையின் முடிவில் மழைநீர் கால்வாயில் தவறி விழுந்ததால் நெற்றிப் பொட்டில் அடிபட்டதே உயிரிழப்புக்குக் காரணம் எனத் தெரியவந்ததால் மாநகராட்சி நிர்வாகம் பொய் கூறியது அம்பலமானது.
இந்நிலையில் மழைநீர் வடிகால்வாயில் விழுந்து தீபா உயிரிழந்ததற்கு யார் காரணம் என விளக்கம் கேட்டுச் சூளைமேடு போலீசார் மாநகராட்சிக்குக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதில், மழை நீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் யார் என மாநகராட்சியின் செயற்பொறியாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
விளக்கம் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனச் சூளைமேடு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.