ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஹஸ்ரத்பல் மசூதி கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த தேசிய சின்னத்தை உள்ளூர்வாசிகள் சேதப்படுத்திய வீடியோ வெளியான நிலையில், அச்சம்பவத்துக்குக் கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
ஸ்ரீநகரின் அருகே உள்ள ஹஸ்ரத்பல் எனுமிடத்தில் இருந்த மசூதி அம்மாநில வக்பு வாரியத்தால் சீரமைக்கப்பட்டது. பின்னர் சீரமைப்பு தொடர்பான கல்வெட்டு ஒன்றும் அங்கு நிறுவப்பட்டது.
அந்தக் கல்வெட்டில் தேசிய சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது, தங்களது மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை மீறுவதாகக் கூறி உள்ளூர்வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்த கல்லை எடுத்துக் கல்வெட்டின் மீது பொறிக்கப்பட்டிருந்த தேசிய சின்னத்தை உடைத்து அகற்றினர்.
அப்போது இஸ்லாம் சிலை வழிபாட்டை தடைசெய்கிறது என்றும், அந்தச் சின்னம் அந்தக் கொள்கையையே மீறுகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான காணொலி இணையத்தில் வைரலான நிலையில், அசோகச் சின்னத்தை உடைத்தவர்களுக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்துள்ளன.
இதுகுறித்துப் பேசியுள்ள ஜம்மு காஷ்மீர் வக்பு வாரிய தலைவரும், பாஜகத் தலைவருமான தரக்ஷன் அந்த்ராபி, அசோகச் சின்னம் சேதப்படுத்தப்பட்டது பயங்கரவாத தாக்குதல் எனத் தெரிவித்துள்ளார். மேலும், தேசிய சின்னத்தை வைப்பதை எதிர்ப்பவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
















