மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிராவில் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். 10 நாட்கள் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியில் பல்வேறு பகுதிகளில் வழிபாட்டிற்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
அந்த வகையில் மும்பையின் பிரசித்தி பெற்ற லால் பாக்சா ராஜா என்றழைக்கப்படும் பிரமாண்ட விநாயகர் சிலை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு வண்ண பொடிகளை தூவியும், ஆடி பாடியும் உற்சாகமடைந்தனர்.
இதேபோல் புனேவில் லோக்மான்ய பால கங்காதர் திலக் சௌக் பகுதியில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகர் சிலைகளுக்கு பிரியா விடையளித்தனர்.