ஓணம் பண்டிகை தொடர் விடுமுறையையொட்டி பழனி முருகன் கோயிலில் கேரள பக்தர்களின் கூட்டம் பன்டங்க அதிகரித்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், ஓணம் பண்டிகையை கொண்டாடிய கேரள மக்கள் பழனி முருகன் கோயிலுக்கு படையெடுத்துள்ளனர். மலையடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதை, பாத விநாயகர் கோயில், ரோப் கார் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கேரள பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் படிப்பாதை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. யானை பாதை வழியாக கோயிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், படிப்பாதை வழியாக கீழே இறங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், கோயில் வளாகங்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.