சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில், ராணுவ அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இது குறித்த செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.
சென்னை பரங்கிமலையில் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. நாடு முழுவதும் இருந்து வீரர், வீராங்கனைகள் இங்கு ராணுவ பயிற்சி பெறுவது வழக்கம். அதன்படி, 130 ஆண் அதிகாரிகள், 25 பெண் அதிகாரிகள், இந்தியாவின் நட்பு நாடுகளைச் சேர்ந்த 21 பேர் என, மொத்தம் 176 பேர், 49 வார பயிற்சியை முடித்தனர்.
அவர்களுக்கான பட்டமளிப்பு விழா ராணுவ மைதானத்தில் நடைபெற்றது. அப்போது, ராணுவ வீரர்கள் மேற்கொண்ட இருசக்கர வாகன அணிவகுப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.
அதேபோல, ராணுவ வீரர்கள் தற்காப்புக் கலைகளை நிகழ்த்திக் காட்டினர். மேலும், குதிரை சவாரி செய்தும், மிடுக்காக அணிவகுத்தும் அசத்தினர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் அமர் ப்ரீத் சிங் கலந்து கொண்டார். அவர் புதிதாக பொறுப்பேற்கவுள்ள அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பட்டங்களை வழங்கினார்.
இந்த நிகழ்வில், பயிற்சி முடித்த வீரர்களின் பெற்றோர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர். அப்போது, அவர்கள் கண்கலங்கியபடி வீரர்களை கட்டிப்பிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
வடசென்னையைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகனான வரதராஜன் என்பவர், ராணுவ அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நாளை மறக்க முடியாது எனவும், நாட்டிற்காக சிறந்த முறையில் பணியாற்றுவேன் என்றும் அவர் கூறினார்.
இதேபோல், ராணுவ அதிகாரியாக பணியைத் தொடரவுள்ள வரப்பிரசாத் என்பவர், தனது பெற்றோரின் தியாகமும், OTA-ல் பெற்ற பயிற்சியுமே தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்தார். தனது நாட்டுக்காக முழு மனதோடு சேவையாற்றப் போவதாகவும் அவர் கூறினார்.
இப்படி, பயிற்சி முடித்த அனைத்து வீரர்களும், அவர்களது பெற்றோர்களும் மகிழ்ச்சியுடனும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் இருந்தனர். இந்த 176 வீரர்களின் பயற்சி மட்டும்தான் தற்போது முடிந்துள்ளது. நாட்டிற்கு அவர்கள் ஆற்றவுள்ள பணி இனிதான் தொடங்கவுள்ளது.